Connect with us

Cricket

சேவாக் – கம்பிர் சண்டை : பதவியில் இருந்து விலகினார் அதிரடி மன்னன் சேவாக்!

டெல்லி கிரிக்கெட் சங்க கிரிக்கெட் கமிட்டியிலிருந்து சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சாங்வி மொத்தமாக ராஜினாமா செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இவர்கள் மூவரும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகரை பந்து வீச்சுப் பயிற்சியாளராகத் தக்க வைக்க வேண்டும் என்று கூறியதாகவும் ஆனால் நிர்வாகம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இவர்கள் மூவர் ராஜினாமாவையும் ஏற்றுக் கொண்ட டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கிரிக்கெட் கமிட்டியை உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி நியமிப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து சேவாக் கூறும்போது, “டெல்லி கிரிக்கெட்டை எங்களால் முன்னேற்ற வாய்ப்பும் கால அவகாசமும் வழங்கப்பட்டது. இருப்பினும் டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதி நாங்கள் மூவரும் ராஜினாமா செய்கிறோம். காரணம் எங்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் இறுக்கமாக இருப்பதால் இதனைக் கவனிக்க முடியவில்லை” என்று நாசுக்காக பதிலிறுத்தியுள்ளார்.

ஆனால் இந்தக் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த கவுதம் கம்பீர், மனோஜ் பிரபாகர் நீடிப்பதில் அதிருப்தி கொண்டதாகக் கூறப்படுகிறது, இதனால் சேவாக், சோப்ரா, சாங்வி, ஆகியோருக்கும் கம்பீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் இதனையடுத்து இவர்கள் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

மனோஜ் பிரபாகர் 2000-ம் ஆண்டில் சூதாட்டப் புகாரில் சிக்கியவர் என்பதால் அவர் நீடிக்கக் கூடாது என்று கம்பீர் விரும்புவதாக டிடிசிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கம்பீர் ஒருவரின் திறமையை விட அவரது நேர்மையைப் பெரிதாக மதிப்பவர் என்றும் இதனால் மனோஜ் பிரபாகரை ஆதரிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்ததாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ஆதாயம் தரும் இரட்டைப் பதவிதான் இவர்கள் ராஜினாமா செய்யக் காரணம் என்று ஒரு சில தரப்பினர் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See