Connect with us

Tennis

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பட்டத்தை தட்டிச்சென்றார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா!

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மல்லுகட்டினர்.

முதலாவது செட்டில் 2-வது கேமில் ஸ்விடோலினாவின் சர்வீசை முறியடித்த ஸ்டீபன்ஸ் அதன் தொடர்ச்சியாக முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஸ்விடோலினா மூன்று முறை எதிராளியின் சர்வீசை ‘பிரேக்’ செய்து அந்த செட்டை தனக்கு சாதகமாக மாற்றினார். கடைசி செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்விடோலினாவின் கை ஓங்கியது. பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை ஸ்டீபன்ஸ் அதிகமாக (48 முறை) செய்ததால், பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

2 மணி 23 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து முதல்முறையாக இந்த பட்டத்தை உச்சிமுகர்ந்தார். 46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்த கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த தொடரில் ஸ்விடோலினா தோல்வியே சந்திக்கவில்லை. 2013-ம் ஆண்டு செரீனா வில்லியம்சுக்கு பிறகு தோல்வி பக்கமே செல்லாமல் வாகை சூடிய வீராங்கனை ஸ்விடோலினா தான். 24 வயதான ஸ்விடோலினாவின் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பட்டம் இதுவாகும். ‘இது எனக்கு சிறப்பு வாய்ந்த தருணமாகும். எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. இந்த வெற்றி நிறைய நம்பிக்கையை கொடுக்கும்’ என்று ஸ்விடோலினா பெருமிதத்துடன் கூறினார். போட்டி கட்டணம், லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்குரிய பரிசு என்று எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் ரூ.17¼ கோடியை ஸ்விடோலினா பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த ஸ்டீபன்சுக்கு ரூ.8¾ கோடி கிட்டியது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். ஸ்டீபன்ஸ் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடிக்கிறார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார்.

இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரியா)- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ ஜோடியும், விம்பிள்டன் சாம்பியனுமான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா இணையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இவர்களுக்கு ரூ.3½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு இந்த போட்டி சீனாவின் ஷின்ஜென் நகருக்கு மாற்றப்படுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See